உடல் முழுக்க கவசம், சொட்டி உள்ளுக்குள் வடியும் வியர்வை, நிமிடத்திற்கு நிமிடம் மருத்துவமனையில் குவியும் நோயாளிகள், எங்கு பார்த்தாலும் கதறல், யாதொருவரையும் கணிவாக கவனித்தாக வேண்டும் என்று இங்கும் அங்கும் என்று மருத்துவ மனைக்குள்ளேயே ஒரு ஓட்டம், சாப்பிட கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு குவியும் பணிகள் என்று இரண்டு அலைகளின் நடுவே ஓயாது பணிகளை செய்து கொண்டிருந்த ஒரு அரண்கள், நம்மை காப்பாற்றும் நோக்கில் 800-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறது.
கொரோனோ என்னும் நுண்கிருமிக்கு எதிரான போரில் ஒட்டு மொத்த நாடும் நிலை குலைந்து கிடந்த நிலையில், தங்கள் உயிரை அரணாக வைத்து, தங்கள் குடும்பங்களை பிரிந்து மருத்துவமனையே வீடு என்று கிடந்து தன்னலம் பாராது உழைத்து நாட்டையே மீட்டுக்கொடுத்த மருத்துவர்களுக்கு இந்த நாடு எத்தனை நன்றியையும் உதிர்த்தாலும் அது பற்றாது.
எல்லையில் துப்பாக்கி பிடித்து நாட்டை காத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் செய்கின்ற அதே வேலையை இந்த இரண்டு அலைகளின் நடுவே மருத்துவர்கள் ஊசியையும் மருந்துகளையும் பிடித்து செய்தனர். தொற்றுக்கு பயந்து தங்கள் குடும்பத்தினரே தங்களை ஒதுக்கும் சூழல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிய நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களை கருணையோடு கவனித்து அவர்கள் குணமாகும் வரையில் அருகில் நின்று மருத்துவங்களை செய்து தங்களுள் 800-க்கும் மேற்பட்டோரையும் இழந்து நிற்கும் இந்த மருத்துவர்களின் பணி நிச்சயம் கடவுளின் காத்தலுக்கு நிகரானது.
” காத்தல் என்னும் மகத்தான பணி கடவுள் செய்கின்ற பணி என்றாலும், அப்பணியை இந்த போருக்கு நடுவில் மருத்துவர்கள் ஏற்று நிற்கின்றனர் “
Post a Comment